புதிய பாலம் கட்டுவதற்காக அகழியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
புதிய பாலம் கட்டுவதற்காக அகழியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
தஞ்சாவூர்
தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் இருந்து தென்கீழ்அலங்கம் வரை அகழிகள் உள்ளன. இந்த அகழியின் குறுக்கே ஏற்கனவே போடப்பட்டிருந்த பாலங்களை இடித்துவிட்டு சீனிவாசபுரம், செக்கடி, முருகன்காலனி, ரோகினிகாலனி, வடக்குவாசல், சிரேஸ்சத்திரம், கொடிமரத்து மூலை, கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார்கோவில் ஆகிய 9 இடங்களில் புதிய பாலங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய பாலங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.49 கோடியே 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 6 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 3 இடங்களில் பாலம் கட்டப்பட உள்ளன. இவற்றில் சிரேஸ்சத்திரம் ரோடு பகுதியில் பாலம் கட்டப்பட உள்ள இடத்தில் அகழியை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டுவதற்காக வீடுகள், கடைகளை இடித்து தள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனால் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். அவர்கள் காலி செய்யவில்லை. இந்தநிலையில் நேற்றுகாலை பொக்லின் எந்திரம் மூலம் வீடுகள், கடைகளை இடித்து தள்ளுவதற்காக அதிகாரிகள் வந்தனர்.
போலீசார் குவிப்புஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடுகள், கடைகளை காலி செய்ய எங்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டு வீடுகள், கடைகளை இடிக்கும் பணியை தொடங்கினர். அந்த பணியை செய்யவிடாமல் அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வீடு, கடைகளில் இருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கூட காலஅவகாசம் வழங்கப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். மின் இணைப்பு பெற்றுள்ளோம். பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளோம். அப்படி இருந்தும் காலஅவகாசம் வழங்காமல் வீடுகளை இடித்து விட்டதால் நாங்கள் தெருவில் அனாதையாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு மட்டும் சலுகை வழங்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள் என மொத்தம் 17 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ரோகினிகாலனியில் 23 வீடுகளை இடிக்க உள்ளனர். அவர்களுக்காவது காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அகழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்கனவே மாற்றுஇடமாக பிள்ளையார்பட்டியில் உள்ள குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கே அவர்கள் செல்ல மறுத்து வருகின்றனர் என்று கூறினர்.