வாடிப்பட்டி பகுதிகளில் பலத்த மழை மின்னல் தாக்கியதில் போலீஸ்நிலையம், வங்கிகளில் கணினி பாதிப்பு
வாடிப்பட்டி பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வாடிப்பட்டி,
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் எங்கும் வறட்சி உருவாகி உள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல அனைவரும் அஞ்சி வருகின்றனர். குழந்தைகள் வெப்பத்தின் தாக்குதலாலும், முதியோர்கள் வெயில் கொடுமையாலும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மழை பெய்யாதா என ஆவலுடன் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து, குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வாடிப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சாரலாக பெய்த மழை, தொடர்ந்து 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. அதில் தெருவில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கணினிகள் பழுதுஆனால் வாடிப்பட்டி நகர் பகுதியில் லேசான தூரல் மழை மட்டும் பெய்தது. ஆனால் பயங்கர மின்னல் ஏற்பட்டது. வாடிப்பட்டி போலீஸ்நிலையம் முன்பு உள்ள ஒரு மூடப்பட்ட கிணற்றில் மின்னல் தாக்கியதில் தீப்பற்றி புகை வந்தது, அதைப்பார்த்த போலீஸ்நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் கிணற்றில் பற்றிய தீயை அணைத்தனர். மின்னல் தாக்கியதில் போலீஸ்நிலையம், அருகில் உள்ள 3 வங்கிகளில் உள்ள கணினிகள் பழுதாகின. தொடந்து அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பின்னர் நேற்று காலை கணினிகள் பழுது நீக்கப்பட்டு போலீஸ்நிலையம், வங்கிகள் ஆகியவற்றில் வழக்கமான பணிகள் நடைபெற்றன. மேலும் மின்னல் தாக்கத்தால், வாடிப்பட்டி பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் இருந்த டி.வி. பெட்டிகள், தொலைபேசிகள் பழுதாகி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.