மூதாட்டியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை


மூதாட்டியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 13 May 2017 3:45 AM IST (Updated: 13 May 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது..

ஈரோடு,

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் முத்துசாமி (வயது 27). இவர் தனது மனைவியை பிரிந்துவிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா சென்னம்பட்டியில் லட்சுமி என்பவருடன் வாழ்ந்து வருகிறார். முத்துசாமி கிட்டம்பட்டி மஞ்சுகரட்டில் உள்ள ஒரு தனியார் கல் குவாரியில் லாரி டிரைவராக பணியாற்றினார். அங்கு சென்னம்பட்டியை சேர்ந்த மணியின் மகன் யுவராஜூம் (26) வேலை செய்தார். இதனால் முத்துசாமியும், யுவராஜூம் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் 2 பேரும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

வேலைக்கு செல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் 2 பேரும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே முத்துசாமி தனது அத்தையான மேட்டூர் தாலுகா கொளத்தூர் கருங்கல்லூரை சேர்ந்த குருசாமியின் மனைவி இருசாம்மாள் (65) வீட்டிற்கு சென்றார். அப்போது இருசாம்மாள் தனது கைகளில் வெள்ளிக்காப்புகளை அணிந்து இருந்ததை முத்துசாமி கவனித்தார். பின்னர் அவர் சென்னம்பட்டிக்கு திரும்பினார்.

கொலை

செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் முத்துசாமியும், யுவராஜூம் சேர்ந்து இருசாம்மாளை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 3–12–2015 அன்று முத்துசாமி, இருசாம்மாளின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் இருசாம்மாளிடம், தனது வாகனத்தை அடமானம் வைத்து இருப்பதாகவும், அந்த கடனை அடைப்பதற்காக பணம் கொடுத்து உதவும்படியும் கேட்டுக்கொண்டார். இதை நம்பிய இருசாம்மாள் பணத்தை கொடுப்பதற்காக முத்துசாமியுடன் புறப்பட்டு கிட்டம்பட்டி பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு தயாராக நின்றிருந்த யுவராஜ், முத்துசாமியுடன் சேர்ந்து இருசாம்மாளை மறைவான இடத்திற்கு கடத்தி சென்றார்.

அப்போது அவர்கள் இருசாம்மாளின் வாயை சேலையால் பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன்பின்னர் அவர் அணிந்து இருந்த சுமார் 1 கிராம் எடையுடைய 2 தங்க மூக்குத்திகள், 81½ கிராம் எடையுடைய 8 வெள்ளிக்காப்புகள், ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இதையடுத்து இருசாம்மாளின் உடலை கல் குவாரியில் மறைத்து வைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசாம்மாளை கொலை செய்த முத்துசாமி, யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், இருசாம்மாளை கொலை செய்ய திட்டமிடுதல், கடத்துதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல், கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக முத்துசாமிக்கு 3 ஆயுள் தண்டனையும், இரண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.600 அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் யுவராஜூக்கு 2 ஆயுள் தண்டனையும், இரண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இதனால் முத்துசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.600 அபராதமும், யுவராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story