கும்பகோணம் அருகே, நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன்–மனைவி மீது வழக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
கும்பகோணம் அருகே நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே சாலையில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அங்கு டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 18 முதல் 22 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்து இருந்தனர். ரூ.10 ஆயிரத்தில் தொடங்கி, ரூ.10 லட்சம் வரை அடித்தட்டு மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப டெபாசிட் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குரிய வட்டி மற்றும் முதிர்வு தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 1–ந் தேதி முதல் அந்த நிறுவனம் திறக்கப்படவில்லை. நிதி நிறுவனத்தின் உரிமையாளரையோ, ஊழியர்களையோ செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் நிதிநிறுவனத்தில் டெபாசிட் செய்து பணத்தை இழந்த ஏராளமானோர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேசிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.
அதில், ஆடுதுறை பகுதியில் கணவன்–மனைவி இருவரும் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இதில் பலர் சேமிப்பு கணக்கு தொடங்கி டெபாசிட் பணத்தை செலுத்தி உள்ளனர். திடீரென நிதிநிறுவனத்தை மூடிவிட்டு கணவன்–மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து இருக்கிறார்கள். மோசடி செய்த கணவன்–மனைவி இருவரையும் கைது செய்து எங்களது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கணவன்–மனைவி மீது வழக்குஇந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர், மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி விஜயநிர்மலா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 2 பேரும் கும்பகோணம் மகாமகக்குளக்கரை பகுதியில் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணன் சொந்த ஊர் திருமங்கலக்குடி ஆகும். இந்தநிலையில் குற்றப்பிரிவு போலீசார் ஆடுதுறைக்கு சென்று நிதி நிறுவனம் நடத்தப்பட்ட பகுதிக்கும், அவர்கள் வசித்து வந்த கும்பகோணம் மகாமகக்குளக்கரை பகுதிக்கும் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கணவன்–மனைவி இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.