கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 32). இவர், புதுவாயல்–ஆரணி செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 7–ந்தேதி இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு திருச்செல்வம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து ராகவரெட்டிமேடு கிராமத்தை நோக்கி செல்லும்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென அவர் மீது மோதுவது போல் வந்து வழிமறித்து நின்றது. இதில் நிலை தடுமாறிய திருச்செல்வம் கீழே விழுந்தார். அவரது நெற்றி பகுதியில் கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள், அவரிடம் இருந்த மது விற்ற ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அதே காரில் தப்பிச்சென்று விட்டனர். அதே போல கடந்த மாதம் 14–ந்தேதி கவரைப்பேட்டையை அடுத்த போரக்ஸ் என்ற இடத்தில் உள்ள மதுக்கடையின் ஊழியர்களை தாக்கி கடையை திறந்து ரூ.4½ லட்சத்தை காரில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
5 பேர் கைதுஇது குறித்து துப்பு துலக்கிட திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
முதல்கட்டமாக சம்பவ இடங்களில் பதிவான சந்தேகத்திற்கு இடமான செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதன் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய பொன்னேரியை அடுத்த வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அருண் (27), மதன்குமார் (23), ஜெயசீலன் என்ற கார்த்திக் (22), சோழவரத்தை அடுத்த பெரிய காலனியை சேர்ந்த அருண்(25) மற்றும் புழல் பகுதியை சேர்ந்த பக்ரூதீன் (22) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட 2 கார்களையும், ரூ.7½ லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
இது தவிர மீஞ்சூர், பெரியபாளையம் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களிலும் மேற்கண்ட 5 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்கண்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.