கார் தீப்பிடித்ததில் 3 பேர் சாவு: சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்


கார் தீப்பிடித்ததில் 3 பேர் சாவு: சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 1 Jun 2017 5:00 AM IST (Updated: 1 Jun 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

கார் தீப்பிடித்து 3 பேர் இறந்த சம்பவத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமையில் தனியார் வீட்டுமனை வளாக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது, அதில் இருந்த சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த தனியார் நிறுவன ஆடிட்டர் ஜெயதேவன் (வயது 55). அவரது மனைவி ரமாதேவி (55), அவர்களது மகள் திவ்யஸ்ரீ (26) ஆகியோர் உடல் கருகி இறந்தனர்.

இது குறித்து மாமல்லபுரம் போலீசார் கூறியதாவது:

ஜெயதேவன் கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்தவர். திவ்யஸ்ரீ ராணுவ கேப்டன் சரத் என்பவரை திருமணம் செய்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ தளத்தில் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. திவ்யஸ்ரீயை கண்டிக்குமாறு சரத் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜெயதேவன் பஞ்சாப் சென்று கடந்த மாதம் 22–ந்தேதி மகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

தற்கொலை செய்துள்ளனர்

தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் குடும்பத்தினர் மீது திவ்யஸ்ரீயும், மாமனார் குடும்பத்தினர் மீது சரத்தும் புகார் செய்துள்ளனர். போலீஸ் நிலையம் வரை குடும்ப பிரச்சினை சென்றதால் ஜெயதேவன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயதேவன் குடும்பத்தினரை தாம்பரம் மகளிர் போலீசார் விசாரிக்க அழைத்த நிலையில் 27–நதேதி இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் உள்ள தனியார் வீட்டுமனை வளாகத்தில் காருக்குள் கருகிய நிலையில் 3 பேரும் இறந்து கிடந்தனர்.

மேலும் சென்னையில் இருந்து புறப்பட்ட ஜெயதேவன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக உத்தண்டி சோதனைச்சாவடி வழியாக மாமல்லபுரம் வந்து பின்னர் மணமை வந்துள்ளார். அங்கு அவர் காரை நிறுத்தி காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். அவர்கள் உத்தண்டியை தாண்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காரில் தானாக தீப்பற்றவில்லை. காரின் உள்பக்கம் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர்.

முன்னதாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மணமை பகுதியை தேர்வு செய்து தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக சிலர் கார் கண்ணாடியை உடைத்து காப்பாற்ற முயற்சிக்கும்போது காப்பாற்றுங்கள் என்று ஒரு குரல் கூட காரில் இருந்து வரவில்லை. அதில் இருந்தே அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலேயே முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.


Next Story