பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்டதால் நண்பரை வெட்டிக்கொன்ற விசைத்தறி தொழிலாளி கைது


பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்டதால் நண்பரை வெட்டிக்கொன்ற விசைத்தறி தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:00 AM IST (Updated: 1 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்ட நண்பரை, விசைத்தறி தொழிலாளி, வெட்டிக்கொலை செய்தார்.

பல்லடம்,

பல்லடம் அருகே பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்ட நண்பரை, விசைத்தறி தொழிலாளி, வெட்டிக்கொலை செய்தார். இதையடுத்து விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

எலெக்ட்ரீசியன்

புதுக்கோட்டை நகரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி செந்தூரான் காலனியில் தங்கி எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி வனிதா(32). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு தனது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, வனிதா மட்டும் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகரில் தனியாக வீடு எடுத்து தங்கினார். ரமேஷ் கரைப்புதூரிலேயே தனியாக தங்கி இருந்தார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கரைப்புதூரில் உள்ள தனது நண்பர் மணி என்ற பழனிச்சாமி (51) வீட்டின் முன்பு, ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ரமேசின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

அத்துடன், ரமேசின் நண்பரான மணி என்ற பழனிச்சாமியும் தலைமறைவாகி இருந்தார். மேலும், நண்பர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதும் தெரியவந்தது. இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பழனிச்சாமியை தேடி வந்தனர்.

விசைத்தறி தொழிலாளி கைது

மேலும் பழனிச்சாமியின் செல்போன் எண்ணை கொண்டு செல்போன் டிராக்கிங் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது செல்போன் டவர், வாளையார் மற்றும் கேரளாவை காட்டியது. பின்னர் கோவை மற்றும் பல்லடம் பஸ் நிலையத்தை காட்டியது. இதையடுத்து போலீசார் பல்லடம் பஸ் நிலையம் சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த பழனிச்சாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான பழனிச்சாமி விசைத்தறி தொழிலாளி ஆவார்.

பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ‘‘ ரமேசும், பழனிச்சாமியும் நெருங்கிய நண்பர்கள் என்றும், பழனிச்சாமி விசைத்தறி தொழிலாளி என்றும், கடந்த வாரம் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது சிறிது தூரம் சென்றதும் பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்று விட்டது. அப்போதுதான் ரமேசின் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பழனிச்சாமி திருடி அவருடைய மோட்டார் சைக்கிளில் ஊற்றியுள்ளார் என்றும் தெரியவந்தது.

வாக்குவாதம்

அதன்பின்னர் மறுநாள் இருவரும் மதுகுடிக்க சந்தித்தபோது, பெட்ரோல் திருடியது குறித்து பழனிச்சாமியிடம், ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கும் வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், பழனிச்சாமியை தாக்கி உள்ளார். இதனால் அவமானம் அடைந்த பழனிச்சாமி, ரமேஷ் மீது வன்மம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பழனிச்சாமி தனது நண்பரான ரமேசை வெட்டிக்கொலை செய்து விட்டு ரெயிலில் சோமனூர் வழியாக கேரளாவுக்கு தப்பி சென்று இருப்பதும், அதன்பின்னர் அவர் அங்கிருந்து கோவை வழியாக பல்லடம் வந்து பல்லடம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றபோது கைது செய்யப்பட்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைதான விசைத்தறி தொழிலாளி பழனிச்சாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


Next Story