சென்டாக் மாணவர்களை சேர்க்க மறுக்கும் மருத்துவ கல்லூரிகளின் தடையில்லா சான்றிதழை ரத்து செய்வோம்


சென்டாக் மாணவர்களை சேர்க்க மறுக்கும் மருத்துவ கல்லூரிகளின் தடையில்லா சான்றிதழை ரத்து செய்வோம்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:30 AM IST (Updated: 1 Jun 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

சென்டாக் மாணவர்களை சேர்க்க மறுக்கும் மருத்துவ கல்லூரிகளின் தடையில்லா சான்றிதழை ரத்துசெய்வோம் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி,

சென்டாக் மூலம் தேர்வான மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான தடையில்லா சான்றிதழை ரத்துசெய்வோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவை சட்டசபையில் ஜீரோ அவரில் எம்.எல்.ஏ.க்கள் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக எழுப்பிய பிரச்சினைகள் வருமாறு:–

முதுகலை படிப்பு

அன்பழகன்: புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் 159 இடங்கள் 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பெறப்பட்டது. ஆனால் அரசு கட்டணத்தை கலந்தாய்வின்போது அறிவிக்காததால் நிறைய பேர் சேரவில்லை. ஆனால் தற்போது அந்த கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க மறுக்கின்றனர். அந்த கல்லூரிகளுக்கான தடையில்லா சான்றிதழை ரத்துசெய்வோம் என்று அமைச்சர் கூறினார். இந்தநிலையில் கலந்தாய்வுக்கு கவர்னர் சென்று தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக பேசுகிறார். கவர்னரே நேரடியாக சென்று மாணவர்களை சேர்க்கும்போது இந்த அரசு எதற்கு? அமைச்சர் எதற்கு?

சிவா: மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் என்ன நடக்கிறது? என்பதை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த அவையை ஒத்திவைத்து அதுகுறித்து விவாதிக்கவேண்டும். இப்போது அரசு என்னும் ஜனநாயக அமைப்பே கேள்விக்குறியாகி உள்ளது. நாம் செய்வது தவறு என்று கவர்னர் கூறுகிறார். மாணவர்களை நானே சேர்த்து விடுகிறேன் என்கிறார்.

எம்.என்.ஆர்.பாலன் கோபம்

இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் எழுந்து பேசமுயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பேசிய எம்.என்.ஆர்.பாலன், இந்த பிரச்சினையை முன்பே நான் பேச முயன்றேன். அப்போது அனுமதிக்கவில்லை. அப்போது அனுமதித்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். இப்போது என்னை பேசவிடாவிட்டால் வெளிநடப்பு செய்வேன் என்று கோபத்துடன் கூறினார். அவரை சக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைதிப்படுத்தி அமர வைத்தனர்.

தடையில்லா சான்றிதழ்

தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடங்கள் பெறப்பட்டு முதல்கட்ட கலந்தாய்வுக்கு நடந்து 41 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர். அடுத்ததாக 35 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர். தொடர்ந்து நடந்த கலந்தாய்வின்போது ஒட்டுமொத்தமாக 91 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர். இதில் 98 பேர் தனியார் கல்லூரிகளில் சேர சேர்க்கை ஆணை பெற்றனர். அதன்பின்னரும் 71 இடங்கள் நிரம்பாததால் பொதுக்கலந்தாய்வு நடந்தது. அதில் 10 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர். பலர் வெளிமாநிலத்துக்கு சென்று சேர்ந்துவிட்டனர். நாங்கள் மத்திய அரசின் விதிப்படிதான் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்த்தோம். மீதி 61 இடங்கள் காலியாக இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடமும் பேசியுள்ளேன். இதுதொடர்பாக அவர் முடிவு எடுப்பதாக கூறினார்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு கல்விக்கட்டணமாக ரூ.5½ லட்சத்தை கட்டணக்குழு நிர்ணயம் செய்தது. அதை கல்லூரிகள் ஏற்க மறுப்பதாக கூறினார்கள். அத்தகைய கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை ரத்துசெய்வோம் என எச்சரித்தார். விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

அதைத்தொடர்ந்து பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ., முதல்–அமைச்சரின் பதிலில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும் அதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறிவிட்டு சபையிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர் ஆகியோரும் சபையை விட்டு வெளியேறினார்கள்.


Next Story