பா.ஜனதா தலைவரின் கருத்தால் சர்ச்சை காங்கிரஸ் கண்டனம்
விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் குறித்து பா.ஜனதா தலைவர் மாதவ் பண்டாரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
மும்பை,
விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் குறித்து பா.ஜனதா தலைவர் மாதவ் பண்டாரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விலைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முழுவதும் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுபற்றி மும்பையில் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் மாதவ் பண்டாரி, ‘‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது பெரிய விஷயமே இல்லை. சேமித்து வைத்திருக்கும் உணவுதானியங்களை விற்பனை செய்யவில்லை என்றால், இழப்பு அவர்களுக்கு தான். அரசு எதையும் இழக்காது. விவசாயிகளின் போராட்டம் நீடித்தாலும் அரசு அசையாது’’ என்றார்.
காங்கிரஸ் கண்டனம்விவசாயிகளின் போராட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் மாதவ் பண்டாரி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘மாதவ் பண்டாரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜனதாவுக்கு விவசாயிகள் தேவைப்படாவிட்டாலும், நாட்டுக்கு விவசாயிகள் தேவை. ஒட்டுமொத்த மராட்டியமும் விவசாயிகளுக்கு சொந்தமானது. பா.ஜனதா தங்களுக்கு தேவையில்லை என்பதை விவசாயிகள் உணர்த்த வேண்டும்’’ என்றார்.