சேலம் பெண்ணிடம் ரூ.41 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன ஏஜெண்டு கைது


சேலம் பெண்ணிடம் ரூ.41 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன ஏஜெண்டு கைது
x
தினத்தந்தி 2 Jun 2017 5:16 AM IST (Updated: 2 Jun 2017 5:16 AM IST)
t-max-icont-min-icon

குடைமிளகாய் வாங்கி கொண்டு சேலம் பெண்ணிடம் ரூ.41 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் கங்காபவானி. இவர் விவசாய உணவு பொருட்களை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்து வந்தார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்டுஜான்(வயது42). இவரும் சென்னை மேடவாக்கத்தில் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராகவும், ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார்.

உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் வி‌ஷயமாக இருவரும் அறிமுகம் ஆனார்கள். எட்வர்டு ஜான் மலேசியாவிற்கு விவசாயம் சார்ந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்து வந்ததால், கங்காபவானியிடம் ஏற்றுமதி செய்யக்கூடிய உணவுபொருட்கள் ஏதேனும் இருந்தால் ஆர்டர் கொடுங்கள். அதை விற்று பணத்தை குறித்த நாளில் தருவதாக உறுதி அளித்தார்.

ரூ.41 லட்சம் மோசடி

அப்போது கங்காபவானி, ஆந்திரமாநிலம் குண்டூரில் இருந்து குடைமிளகாய் தன்னிடம் வியாபாரத்திற்காக வரும். நீங்கள் அதை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, அதற்கான பணத்தை எனக்கு தந்தால் போதும் என எட்வர்டு ஜானிடம் தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.41 லட்சம் மதிப்பிலான குடைமிளகாயை 2 கன்டெய்னர்களில் வைத்து எட்வர்டு ஜானுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அவர், அதை மலேசியாவுக்கு கப்பல் மூலம் அனுப்பி ஏற்றுமதி செய்து விட்டு, அதற்கான தொகையை கங்காபவானியிடம் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் எட்வர்டு ஜான் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார். அதற்கு அவரது மனைவி பியூலாராணி, ஊழியர் விஸ்வநாதன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஏஜெண்டு கைது

இது தொடர்பாக கங்காபவானி கொடுத்த புகாரின் பேரில், எட்வர்டு ஜான், அவரது மனைவி பியூலாராணி, ஊழியர் விஸ்வநாதன் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஏஜெண்டு எட்வர்டுஜானை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து கைது செய்தார். தலைமறைவான இருவரையும் தேடி வருகிறார்.


Next Story