கோவை நகருக்குள் புகுந்து அட்டகாசம்: காட்டு யானை 4 பேரை கொன்றது


கோவை நகருக்குள் புகுந்து அட்டகாசம்: காட்டு யானை 4 பேரை கொன்றது
x
தினத்தந்தி 3 Jun 2017 5:15 AM IST (Updated: 3 Jun 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

கோவை நகருக்குள் புகுந்த காட்டு யானை 4 பேரை கொன்றது. அட்ட காசம் செய்த அந்த காட்டு யானை 8½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிபட்டது.

கோவை,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதைத்தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைவான பகுதி வழியாக வெளியே வந்து கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை விட்டு கடந்த 31-ந் தேதி இரவில் ஒரு காட்டு யானை வெளியே வந்தது. அந்த யானை பாலக்காடு மெயின் ரோட்டில் சாலைத்தடுப்பை தாண்டி குனியமுத்தூர் பி.கே.புதூருக்குள் புகுந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

சிறுமி பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அந்த காட்டு யானை எட்டிமடை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது. 3 கி.மீ. தூரம் ரோட்டிலேயே நடந்து வந்த அந்த யானை நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவை போத்தனூர் அருகே ஸ்ரீனிவாசன் நகருக்குள் புகுந்தது. அங்கிருந்து கணேசபுரம் மூராண்டம்மன்கோவில் வீதிக்கு சென்றது.

அந்தப்பகுதியை சேர்ந்த கைரேகை ஜோதிடரான விஜயகுமார் (வயது 38) காற்றோட்டத்துக்காக தனது மனைவி தங்கமணி, மகள்கள் காயத்ரி (12), கிருத்திகா (7), மகன் வெற்றி (4) ஆகியோருடன் வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அதிகாலை 3.15 மணி அளவில் அங்கு வந்த காட்டு யானை வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டு இருந்த காயத்ரியை மிதித்தது. இதில் அவர் அலறித்துடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வனத்துறைக்கு தகவல்

அவருடைய அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த விஜயகுமார் தனது அருகே யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அந்த யானை அவரையும் மிதித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையில் தங்கமணி தனது மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது யானை தாக்கியதில் தங்கமணி காயம் அடைந்தார். குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பின. பின்னர் அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஊர் பொதுமக்கள் சேர்ந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கிருந்து ஓடி 2 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளலூருக்கு சென்றது. அங்கு காலை 5 மணி அளவில் வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மனைவி நாகரத்தினம் (50), மாரியப்பன் என்பவரது மனைவி ஜோதிமணி (60) ஆகியோர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

பொதுமக்களை துரத்தியது

அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென்று அவர்கள் 2 பேரையும் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அலறியபடியே அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கம்பு மற்றும் ஆயுதங்களுடன் விரைந்து வந்தனர்.

அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதில் ஆவேசம் அடைந்த யானை பொதுமக்களை விரட்ட தொடங்கியது. இதனால் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். இதில் 5 பேர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

மேலும் 3 பேர் சாவு

இதற்கிடையில் அந்த காட்டு யானை வெள்ளலூர் வெள்ளப்பாளையம் பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள குப்பண்ணகவுண்டர் தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டு இருந்த பழனிசாமி (73) என்பவரை யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த விஜய குமார், தங்கமணி, நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நாகரத்தினம், ஜோதிமணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர் அந்த யானை அங்குள்ள புதருக்குள் நின்றது.

அதிகாரிகள் ஆலோசனை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை பாதுகாப்பு படையினர் காலை 6.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அங்கு கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மண்டல வன பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆலோசனை நடத்தினர்.

மயக்க ஊசி

இதற்கிடையே, ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள கும்கி யானை பாரி லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மனோகரன், அசோகன், விஜயராகவன் ஆகியோரும் அங்கு வந்து அந்த காட்டு யானையை பிடிப்பதற்காக மயக்க ஊசியை செலுத்தினார்கள்.

உடனே அந்த யானை மயங்கி கீழே விழுந்தது. உடனே அதன் அருகே சென்ற வனத்துறையினர் அந்த காட்டு யானையின் கழுத்து மற்றும் கால்களில் கயிறுகளை கட்டினார்கள். யானை எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக யானையின் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை நான்கு பக்கமும் நிறுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்துடன் வனத்துறையினர் கட்டினார்கள். கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை கும்கி யானை பாரியுடன் கட்டப்பட்டது. அதன்பின்னர் மயக்கம் தெளிவதற்காக இரண்டாவதாக மற்றொரு ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது.

லாரியில் ஏற்றப்பட்டது

பின்னர் கும்கி யானையின் உதவியுடன் பிற்பகல் 3 மணி அளவில் காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது. கோவையிலிருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் காட்டு யானை முரண்டு பிடிக்கக்கூடாது என்பதற்காக 3-வதாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனால் யானை லேசாக மயக்கம் அடைந்தது. அதன்பின்னர் லாரி புறப்பட்டது.

8½ மணி நேரம் போராட்டம்

அப்போது அங்கு கூடி நின்ற ஏராளமான பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் அந்த காட்டு யானையை கும்கி யானையாக மாற்றுவதற்காக ஆனைமலை அருகே உள்ள டாப்சிலிப் வரக்கழியாறு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊருக்குள் புகுந்தது 18 வயது ஆண் யானை ஆகும். அது சாதாரணமான நிலையில் இருந்தால் இது போன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு இருக்காது என்றும், அதற்கு மதம் பிடித்து இருந்ததால் தான் 4 பேரை தாக்கியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

காலை 6.30 மணிக்கு அந்த யானையை பிடிக்க தொடங்கிய போராட்டம் மதியம் 3 மணிக்குத்தான் அதாவது 8½ மணி நேரத்திற்கு பிறகுதான் முடிவுக்கு வந்தது.

Next Story