திருக்கோவிலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, பொருட்கள் கொள்ளை


திருக்கோவிலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்சிலை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் தியாகராஜன் வீட்டுக்கு சென்றார்.

கோவிலை திறப்பதற்காக நேற்று காலை 6 மணியளவில் அவர் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் இரும்பு கேட் மற்றும் கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

மேலும் கோவிலுக்குள் இருந்த 3¼ அடி உயரம் கொண்ட ஐம்பொன் அங்காளம்மன் சிலை, கோவில் பீரோவில் வைத்திருந்த பொருட்கள், மூலவரான அங்காளம்மனுக்கு அணிவிக்கும் வைரமூக்குத்தி, விலை உயர்ந்த பட்டுச்சேலைகள் ஆகியவற்றை காணவில்லை. 2 உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த பணத்தையும் காணவில்லை.

ரூ.10 லட்சம் கொள்ளை

அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோனவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த கோவிலை மோப்பமிட்டபடி தெருவழியாக அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த கோவிலில் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story