திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் திருவள்ளூரை அடுத்த தொடுகாடு கிராமத்தில் பழைய இரும்பு கடை மற்றும் பேப்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரிடம் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சைமன் (வயது 40) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 30–ந்தேதி சைமன் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் போலீசார் திருவள்ளூரை அடுத்த தொடுகாடு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 28), திருவூரை சேர்ந்த ரஞ்சித் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பழனி கூறியதாவது:–
வேலையில் இருந்து நீக்கி விட்டார்நான் மூர்த்தியின் கடையில் வேலை செய்து வந்தேன். நான் கையாடல் செய்ததாக மூர்த்தி என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். அதன் பின்னர் அந்த கடையில் சைமன் வேலைக்கு சேர்ந்தார். நான் போலிவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நான் பொருட்களை வாங்க செல்லும் கடைக்கு மூர்த்தியும் வருவார். அப்போது எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்படும். மூர்த்தியை தீர்த்து கட்ட முடிவு செய்து நண்பர்களுடன் மூர்த்தியின் கடைக்கு கடந்த 30–ந் தேதி சென்றேன். அங்கு மூர்த்தி இல்லை. சைமன் மட்டும் இருந்தார். அவருக்கும் எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் நாங்கள் சைமனை குத்திக்கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் திருத்தணி கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.