தம்பிக்கலை அய்யன் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


தம்பிக்கலை அய்யன் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

தம்பிக்கலை அய்யன் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

ஈரோடு,

பவானி தம்பிக்கலை அய்யன் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பெருந்துறை அருகே உள்ள பொன்னாண்டாவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 30 குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இதுவரை பொது கழிப்பிடம் கட்டப்படவில்லை. இதனால் நாங்கள் திறந்தவெளியில் மலம் கழித்து வருகிறோம். இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் ஊரில் உடனடியாக பொது கழிப்பிடம் கட்டவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

நடைபாதை வேண்டும்

ஈரோடு மாநகராட்சி 41–வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 60–க்கும் மேற்பட்டோர் முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அதிகாரி சதீசிடம் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:–

ஈரோடு அண்ணாநகர் பகுதியில் 310 குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வந்து நாங்கள் நடந்து கொண்டிந்த பாதையில் நடக்கக்கூடாது என்று தடை விதிக்கிறார்கள். எனவே எங்களுக்கு நடைபாதை ஒதுக்கித்தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

டாஸ்மாக் கடை

பவானி அருகே உள்ள சலங்கபாளையம், தங்கமேடு, கொட்டபுளிமேடு, பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

சலங்கபாளையம் பகுதியை சுற்றி 1000–த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் எங்கள் ஊரில் பிரசித்திபெற்ற தம்பிக்கலை அய்யன் கோவிலும் உள்ளது. இந்த கோவில் அருகில் தற்போது டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த வழியாகத்தான் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ –மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் சென்று வருகிறார்கள்.

இங்கு மதுக்கடை அமைத்தால் குடிமகன்களால், மாணவ –மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தம்பிக்கலை அய்யன் கோவில் அருகே மதுக்கடை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததார்கள்.

அகற்ற வேண்டும்

அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுவை வாங்கும் குடிமகன்கள் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வந்து அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து மதுவுடன் கலந்து குடிக்கிறார்கள். மதுபோதை தலைக்கேறியதும் தண்ணீர் பிடிக்க வரும் பெண்களை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் பெண்கள் தண்ணீர் பிடிக்க செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே இங்குள்ள மதுக்கடையை உடனடியாக அகற்றவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடை செயல்படும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபடும்போது, அவர்களுக்கும், குடிமகன்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுக்கள்

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து ஒருவருக்கு ரூ.6 ஆயிரத்து 500 மதிப்பிலான தையல் எந்திரமும், தமிழ்நாடு மாநில நோயாளர் நலநிதி அமைப்பின் சார்பில் ஒருவருக்கு நிவாரண தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் எம்.பாபு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஏ.சுரேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.


Next Story