பொன்னேரி பகுதியில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி பகுதியில் தொடர் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின் மோட்டார்கள் இயக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடும் எற்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பொன்னேரி பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து சின்னகாவனம் மற்றும் பெரியகாவனம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பொன்னேரி அருகே பழவேற்காடு–பொன்னேரி நெடுஞ்சாலை மற்றும் சின்னகாவனம் கூட்டு சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைஇதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் மின்வாரிய செயற்பொறியாளர் நேரில் வந்து மின்தடைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் முரளி ஆகியோர் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீரான முறையில் மின்சாரம்அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் தொடர் மின் தடையால் இரவு நேரங்களில் வீட்டில் வெப்பம் காரணமாக மின் விசிறி இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் தவிக்கிறோம். மின் தடையால் மோட்டார் இயக்க முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது’’ என்றனர்.
இதையடுத்து சீரான முறையில் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.