பேரையூர் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொலை; கணவன் போலீசில் சரண்
பேரையூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
பேரையூர்,
பேரையூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
அடிக்கடி தகராறுபேரையூர் அருகே அலப்பலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது இடையபட்டி. இந்த ஊரைச்சேர்ந்த சித்ரன் என்பவருடைய மகன் கண்ணன் (வயது31). இவருடைய மனைவி பஞ்சவர்ணம்(28). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. காளீஸ்வரி(10), சித்ரா(8) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் குழந்தைகள் 2 பேரையும் கண்ணன் தனது அக்காள் ஊரான சாத்தூர் அருகேயுள்ள வெங்கடேசபுரத்தில் நடக்கும் திருவிழாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் மனைவி பஞ்சவர்ணத்தை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் கண்ணன்அவரது அண்ணன் ஊரான மதுரை ஒத்தக்கடை சென்று அங்குள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கைது
இதையடுத்து ஒத்தக்கடை போலீசார், நாகையாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்த போது இரும்புக் கட்டிலில் பஞ்சவர்ணம் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.