கோவையில் மழை பெய்த போது மின்சாரம் தாக்கி அண்ணன்–தங்கை பரிதாப சாவு


கோவையில் மழை பெய்த போது மின்சாரம் தாக்கி அண்ணன்–தங்கை பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மழை பெய்த போது மின்சாரம் தாக்கி அண்ணன்–தங்கை பரிதாப சாவு முறைகேடாக மின் இணைப்பு கொடுத்தவர் கைது

கோவை,

கோவையில் மழை பெய்தபோது மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பரிதாபமாக இறந்தனர். முறைகேடாக மின்இணைப்பு கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

மின்சாரம் தாக்கி அண்ணன்–தங்கை சாவு

கோவையில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்தது. அப்போது கோவை உக்கடம், ஜி.எம்.நகர், மஜீத்காலனியில் சுலைமான் என்பவரது வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. வீட்டில் சுலைமான், அவருடைய மனைவி பாத்திமா ஆகியோர் இல்லை. இதனால் வீட்டில் இருந்த அவர்களின் மகன் சல்மான் (வயது18), மகள் சாய்ராபானு (16) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரத்தில் பிடித்து வெளியே ஊற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டு முன்புறம் இருந்த தனியார் இரும்பு மின்கம்பத்தை சல்மான் தொட்டார்.

உடனே மின்சாரம் தாக்கியதால் சல்மான் அலறிதுடித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கை சாய்ராபானு அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் துடி துடித்து விழுந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் திரண்டனர்

அண்ணன்–தங்கை இறந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் வீட்டு முன்பு திரண்டனர். சல்மான் 8–வது வகுப்புவரை படித்துவிட்டு மீன்கடையில் வேலை செய்து வந்தார். சாய்ராபானு 10–ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த பெற்றோர் தங்களது மகன் மற்றும் மகளின் உடல் களை பார்த்து கதறி துடித்தனர். சுலைமான்–பாத்திமா தம்பதிகளுக்கு 7 குழந்தைகள். இதில் 3–வது மகன் சல்மான், 4–வது மகள் சாய்ராபானு. ஒரே நேரத்தில் இருவரையும் பறிகொடுத்த குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

முறைகேடாக மின் இணைப்பு

இந்த மின் விபத்துக்கு மஜீத்காலனியை சேர்ந்த முஸ்தபா என்பவர் காரணமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். முஸ்தபா, வேறு ஒருவரின் வீட்டில் மின்சார ஒயரை செருகி தனது வீட்டுக்கும், அங்குள்ள கேரம்போர்டு விளையாட்டு மன்றத்துக்கும் முறைகேடாக இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது மின்சார வயரை, இரும்பு கம்பம் வழியாக சுற்றி கட்டியுள்ளார். அந்த மின்சார ஒயர் அறுந்து இருந்துள்ளது.

மழையின் போது மின்சார ஒயரில் இருந்து இரும்பு கம்பத்துக்கு மின்சாரம் பாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக முஸ்தபா (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான முஸ்தபா மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இறந்த இருவரின் உடல்களை பார்ப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வந்தனர். இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கோவை மாவட்ட நிர்வாகிகள் அக்பர், ஆசிக்அகமது ஆகியோர் கூறியதாவது:–

‘உக்கடம் மஜீத்காலனியில் கோவை மாநகராட்சி எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்சார ஒயர்களும் தாறுமாறாக செல்கிறது. மஜீத்காலனியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் தாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கியது போல், இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.குடிசை மாற்று வாரிய வீட்டை இந்த குடும்பத்தினர் குடியிருக்க வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதே கருத்தை மற்ற முஸ்லிம் அமைப்பினரும் தெரிவித்தனர்.

அண்ணன்–தங்கை மின்சாரம் தாக்கி இறந்து சம்பவம் கோவை உக்கடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story