ஸ்ரீவைகுண்டம் அருகே ஆணவ கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் மீட்பு


ஸ்ரீவைகுண்டம் அருகே ஆணவ கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:30 AM IST (Updated: 9 Jun 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆணவ கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆணவ கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக சிறுமியின் சித்தப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சிறுமியின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மணலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், ஏரல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் ஆறுமுகத்திடம்(வயது 33) தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது போலீசாரிடம் ஆறுமுகம் கூறியதாவது:–

ஆணவ கொலை செய்ய முடிவு

எனது கிராமத்தை சேர்ந்த என்னுடைய அண்ணன் சுடலைமுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியில் உள்ள தும்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய மகள் வெண்ணிலா(17) மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.

இதையடுத்து நாங்கள் அனைவரும் வெண்ணிலாவிடம் நைசாக பேசி 18 வயது பூர்த்தியானதும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறினோம். பின்னர் நாங்கள் வெண்ணிலாவை மட்டும் எங்கள் கிராமத்துக்கு அழைத்து வந்தோம். வெண்ணிலா மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்தது எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. எனவே அவளை ஆணவ கொலை செய்ய முடிவு செய்தோம்.

வாயில் வி‌ஷத்தை ஊற்றி கிணற்றுக்குள் போட்டோம்

அதன்படி அவளை பக்கத்து ஊரில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து சென்றோம். அந்த காரில் நானும், என்னுடைய அண்ணன் சுடலைமுத்து, உறவினர்களான பாலசுப்பிரமணியன் என்ற பண்டாரம் (25), இசக்கி பாண்டி ஆகியோரும் சென்றோம். ஆனால் பக்கத்து ஊருக்கு செல்லாமல் வல்லகுளம் தோட்டத்தில் காரை நிறுத்தினோம்.

எங்களது திட்டத்தை அறிந்ததும் வெண்ணிலா தப்பிச் செல்ல முயன்றாள். நாங்கள் அவளுடைய கை, கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவளுடைய வாயில் வி‌ஷத்தை ஊற்றினோம். இதனால் மயக்கம் அடைந்த வெண்ணிலாவை பெரிய கல்லில் மின் ஒயரால் சேர்த்து கட்டி அங்குள்ள கிணற்றுக்குள் போட்டு விட்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல் பாகங்கள் மீட்பு

இதையடுத்து போலீசார் கடந்த 7–ந் தேதி ஆறுமுகத்தை வல்லகுளத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வெண்ணிலாவை கொலை செய்து வீசிய கிணற்றை ஆறுமுகம் அடையாளம் காட்டினார். அந்த கிணற்றில் சுமார் 25 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால், மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது.

நேற்று அந்த கிணற்றில் இருந்து வெண்ணிலாவின் உடல் பாகங்கள், எலும்புக்கூட்டினை போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை ஆய்வக பரிசோதனைக்காக நெல்லை தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சித்தப்பா உள்பட 2 பேர் கைது

இதுதொடர்பாக ஆறுமுகம், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சுடலைமுத்து, இசக்கிபாண்டி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story