காங்கிரஸ் பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து குமுளியில் முழு அடைப்பு போராட்டம்
காங்கிரஸ் பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து குமுளியில் முழு அடைப்பு போராட்டம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குமுளி,
காங்கிரஸ் பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து குமுளியில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாக்குதல்காங்கிரஸ் இளைஞர் அணி மண்டல தலைவர் சனு தாக்கப்பட்டதை கண்டித்து, குமுளியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. குமுளி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கடை வீதிகள், சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக தமிழகத்தின் கம்பம், போடி, தேனி, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து குமுளிக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. போராட்டம் காரணமாக பஸ்கள் எதுவும் வரவில்லை. அனைத்து பஸ்களும் தமிழக எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் குமுளிக்கு சுற்றுலா வந்த வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
இயல்பு வாழ்க்கை பாதிப்புஇதுதவிர கேரள மாநில பஸ்களும் இயக்கப்படவில்லை. போராட்டம் காரணமாக சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குமுளி, தேக்கடி பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கும் விடுதி அறைகளிலேயே முடங்கினர். அவர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
குமுளி பகுதியில் உள்ள காபி, தேயிலை தோட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள். முழு அடைப்பு போராட்டம் காரணமாக வேலைக்கு சென்றவர்கள் தமிழக எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.