கொடைரோடு அருகே, வீடு புகுந்து விவசாயி–மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகைகள், ரூ.2¼ லட்சம் கொள்ளை
கொடைரோடு அருகே, வீடு புகுந்து துணிகரம்: விவசாயி–மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகைகள், ரூ.2¼ லட்சம் கொள்ளை 8 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கொடைரோடு
கொடைரோடு அருகே வீடு புகுந்த கொள்ளையர்கள், தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த விவசாயி–மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகைகள், ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
விவசாயி–மனைவிதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 56). விவசாயி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (50). இவர்கள் தங்களுடைய விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களின் மகன் செந்தில்முருகன், மருமகள் திவ்யா, 2 பேரக்குழந்தைகளும் அவர்களுடன் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், செந்தில்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளப்பட்டிக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ராஜாராம், அவருடைய மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இரவு 8.15 மணி அளவில் 2 பேரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தி, அரிவாள்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அதில் 5 பேர் முகமூடி அணிந்து இருந்தனர். திடீரென ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்ததால், ராஜாராம் தம்பதியினர் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி 2 பேரையும் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டனர்.
மேலும் சத்தம் போட்டு விடாமல் இருப்பதற்காக 2 பேரின் வாயிலும் ‘டேப்பை’ ஒட்டினர். பின்னர் வீடு முழுவதும் ஒவ்வொரு இடமாக கொள்ளையர்கள் நகை, பணம் இருக்கிறதா? என தேடினர். அப்போது ராஜாராம், செந்தில்முருகன் ஆகியோரின் அறைகளில் இருந்த 3 பீரோக்களை பார்த்தனர். ஆனால், பீரோக்கள் பூட்டப்பட்டு இருந்ததால், அவற்றை கொள்ளையர்கள் உடைத்தனர்.
நகை, பணம் கொள்ளைபின்னர் அவற்றில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். அதன்பின்னரும் திருப்தி அடையாத கொள்ளையர்கள், இறுதியில் பாண்டியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்தனர். அதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே ராஜாராம் நீண்டநேரம் போராடி தானே தனது கை, கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்தார். பின்னர் மனைவியையும் கட்டுகளை அவிழ்த்து விடுவித்தார். இதையடுத்து வெளியே வந்து உதவிக்கு ஆட்களை அழைத்தார். அவருடைய சத்தம் கேட்டு பக்கத்து தோட்டங்களில் வசிப்பவர்கள் அங்கு சென்றனர். மேலும் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணைஇதைத்தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் செந்தில்முருகன் தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடு புகுந்து ராஜாராம், பாண்டியம்மாள் ஆகியோரை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை முடுக்கி விட்டார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொடைரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய்களுக்கு மீன், இறைச்சியை போட்ட கொள்ளையர்கள்
ராஜாராம் தோட்டத்தில் வீடு கட்டி வசிப்பதால் காவலுக்கு 4 நாய்களை வளர்த்து வருகிறார். இதனால் பகல் நேரத்தில் கூட வேற்று நபர்கள் தோட்டத்துக்குள் நுழைய முடியாது. அதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் பொரித்த மீன்கள் மற்றும் கோழி இறைச்சியை நிறைய வாங்கி சென்றுள்ளனர். தோட்டத்துக்குள் நுழைந்து ராஜாராமின் வீட்டில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் கொள்ளையர்கள் சென்றதும், 4 நாய்களும் குரைத்தபடி அங்கு வந்துள்ளன. உடனே கொள்ளையர்கள் மீன், இறைச்சியை பரவலாக விழும்படி வீசி உள்ளனர். இதனால் புதர்களுக்குள் விழுந்த இறைச்சி, மீன்களை நாய்கள் ஒவ்வொன்றாக தேடி, தேடி தின்ன தொடங்கின. நாய்களின் கவனம் திசைதிரும்பியதை உணர்ந்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து 2 பேரையும் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.