மத்திய அரசு 28 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி உள்ளது நிர்மலா சீதாராமன் பேச்சு


மத்திய அரசு 28 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி உள்ளது நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2017 11:00 PM GMT (Updated: 11 Jun 2017 9:13 PM GMT)

இந்தியாவில் யாரும் கை ஏந்தக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 28 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி உள்ளது என புதுக்கோட்டையில் நடந்த கருத்தரங்கில் மத்திய இணை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுக்கோட்டை,

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

5 கோடி பேருக்கு கடன்

இந்தியாவில் யாரும் கை ஏந்தக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 28 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. கந்து வட்டியில் இருந்து சிறு தொழில் செய்பவர்களை விடுவிக்கும் வகையில் முத்ரா வங்கி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 5 கோடி பேருக்கு கடன் வழங்கி உள்ளது. விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத நிலை கடந்த காலத்தில் இருந்தது. தற்போது உரம் எளிதில் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு உற்பத்தி பெருகியதால் பொருட்களின் விலை குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்த நஷ்டத்தில் இருந்து விவசாயிகளை விடுவிக்க மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவில்லை.

விவசாயிகளின் வருமானம்...

இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேவையில்லாத சட்டங்களை நீக்கி ஊழல் அற்ற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குளச்சல் துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால் தென்மாநிலங்கள் வளர்ச்சி பெறும். மாநில அரசு மத்திய அரசிடம் எந்த கோரிக்கையையும் வேகமாக வைப்பதில்லை. இதனால் தமிழகத்தில் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் மக்களிடம் சென்று சேராமல் உள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வறுமையை போக்கும்

இதைத்தொடாந்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க நரேந்திரமோடி கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறார். மக்கள் யாரும் கை ஏந்தி நிற்கக்கூடாது என்று மக்கள் நல திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்காக மத்திய அரசு கொடுத்து வருகிறது. ஒரு கோடிக்கு மேல் இதுவரை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. இனிவரும் நாட்களில் மக்களின் வறுமையை போக்கும் வகையில் தொடர்ந்து மத்திய அரசு செயல்படும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த துாய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி நிர்மலா சீதாராமன் பஸ் நிலையத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினார். அவருடன் மாவட்ட கலெக்டர் கணேஷ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story