சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?


சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?
x
தினத்தந்தி 12 Jun 2017 8:55 PM GMT (Updated: 12 Jun 2017 8:55 PM GMT)

நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் என்ன? என்று அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை,

நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் என்ன? என்று அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத்

மும்பையில் 1993–ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்போது வழக்கு விசாரணையின் போது கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த சஞ்சய் தத் பின்னர் ரூ.25 ஆயிரம் சொந்த ஜாமீனில் விடுதலை ஆனார்.

இதைதொடர்ந்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.

சிறையில் அடைப்பு

தீர்ப்பு பாதகமாக அமையவே சஞ்சய் தத் போலீசில் ஆஜரானார். அவரை புனே யரவாடா சிறையில் அடைத்தனர். சிறைவாசத்தின் போது அவர் பல முறை பரோல் விடுப்பில் அனுமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நன்நடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். மேலும் 8 மாதங்கள் அவரது தண்டனை காலம் இருந்தபோதும், அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனேவை சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அரசுக்கு கேள்வி

இந்த வழக்கில் எந்த அடிப்படியில் சஞ்சய் தத்திற்கு விடுதலை வழங்கப்பட்டது. ஜெயில் சூப்பிரெண்டும், டி.ஜி.பி.யும் நேரடியாக மேயருக்கு இதுகுறித்து சிபாரிசு செய்தனரா? சஞ்சய் தத்தின் நல்ல நடத்தையை அதிகாரிகள் அப்படி மதிப்பிட்டனர். எப்படி அவருக்கு அதிக நாட்கள் பரோல் விடுப்பு கிடைத்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை நியாயப்படுத்துமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story