மதுக்கடை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்


மதுக்கடை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2017 2:27 AM IST (Updated: 13 Jun 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் மூடப்பட்ட பிரச்சினையில் மதுக்கடை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை

மதுக்கடைகள் மூடப்பட்ட பிரச்சினையில் மதுக்கடை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுக்கடைகளை மூட உத்தரவு

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று மராட்டியத்தில் பல மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பல மதுக்கடைகளை நீடிக்க செய்யும் வகையில் நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே சாதாரண சாலையையும் நெடுஞ்சாலையாக கருதி, அங்குள்ள மதுக்கடைகளை மராட்டிய அரசு மூடி விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை, பார் உரிமையாளர்கள் பலர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தங்களது மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த பிரச்சினையில் நெடுஞ்சாலைகளை வரையறை செய்யும் ஆணவங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அது தொடர்பான ஆவணங்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் கேம்கர், சோனக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

உங்களது (மதுக்கடை உரிமையாளர்கள்) வாழ்வுரிமை எங்களுக்கு புரிகிறது. ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. உங்களை போல பொதுமக்களுக்கு வாழ்வுரிமை உண்டு என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உணர்த்துகிறது. இது மிகவும் முக்கியமானது. நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறோம். அடுத்த மாதம் (ஜூலை) 15–ந் தேதிக்குள் உங்களது கோரிக்களை அரசு தனித்தனியாக விசாரித்து நியாயமான உத்தரவை வழங்க வேண்டும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயலாளர், கலால் துறை கமி‌ஷனர் ஆகியோருக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story