குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பிடாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துபாளையம் காமராஜர் நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காட்டுப்புத்தூர்-வளையப்பட்டி சாலையில் காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

இதேபோல மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அரசுநிலைப்பாளையம் மற்றும் வீரமலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று அணியாப்பூர் அருகே சந்தைப்பேட்டை என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வையம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருதுபாண்டி, பெரியசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் அணியாப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story