டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.6 லட்சம் கொள்ளை


டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.6 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.6 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது கீழச்சிவல்பட்டி. இங்குள்ள பெரிய கடை வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது கடை அடைக்கப்பட்டதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் யாரோ கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நேற்று காலை டாஸ்மாக் கடையை விற்பனையாளர் கண்ணதாசன் திறந்து பார்த்தபோது, கடையினுள் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சமும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கண்ணதாசன் உடனடியாக கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கடையில் பணம் கொள்ளை போனது குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார்.

மேலும் சிவகங்கைதடயவியல் துறை துணை கண்காணிப்பாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். இதேபோல் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கதிரேசன், மேலாளர் செல்வராஜ் ஆகியோர் கடையின் இருப்பு குறித்து சரிபார்ப்பு மேற்கொண்டனர். பின்னர் இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபாட்டில்களும் திருட்டு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, கடையின் பின்புறம் உள்ள சுவரில் கொள்ளையர்கள் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் கடையின் பண பெட்டியில் இருந்த ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்கள் கொள்ளையடித்த பணம், கடந்த 3 நாட்களாக இந்த கடை மூலம் வியாபாரமான தொகையாகும். பணம் கொள்ளையடித்தது மட்டுமின்றி மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

அந்த பெட்டிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் சுவரின் துளை பகுதியில் விழுந்து உடைந்து கிடந்தன என்றனர்.


Related Tags :
Next Story