கூடங்குளம் பகுதி இளைஞர்களுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


கூடங்குளம் பகுதி இளைஞர்களுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:58 PM GMT (Updated: 12 Jun 2017 11:58 PM GMT)

கூடங்குளம் பகுதி இளைஞர்களுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூடங்குளம் பகுதி இளைஞர்களுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பாஸ்போர்ட்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், கூடங்குளம் அணுஉலை திட்டத்துக்கு எதிராக நெல்லை மாவட்டத்தின் கடலோர மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் அணுஉலை பூங்கா என்று மொத்தம் 6 அணு உலைகள் அமைக்க வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது 350–க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகும் கூட, வழக்குகளை வாபஸ் வாங்கவில்லை. இந்த வழக்குகளுக்கு கோர்ட்டில் இருந்து அழைப்பாணைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்த வழக்குகளை காரணம் காட்டி, அந்த பகுதி இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்க மறுக்கிறார்கள். எனவே கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அமைப்பாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘நாங்கள் பி.ஏ.சி.எல். நிதி நிறுவனத்தில் முகவர்களாக செயல்பட்டு வந்தோம். அந்த நிறுவனத்தில் தவணைமுறை மற்றும் மொத்த முதலீடு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. தற்போது நிறுவனம் முடக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கோர்ட்டு உத்தரவுப்படி அந்த நிறுவன சொத்துக்களை விற்பனை செய்து, பொது மக்களுக்கு பணத்தை திருப்பி ஒப்படைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணம் திருப்பி அளிக்கப்படவில்லை. இதனால் முகவர்கள் பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ரோடு சீரமைப்பு

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் பொது மக்கள் கொடுத்த மனுவில், ‘‘கருத்தப்பிள்ளையூரில் இருந்து ஆம்பூர் ரெயில்வே கேட் வரை உள்ள 5 கிலோ மீட்டர் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். அதேபோல் கருத்தப்பிள்ளையூருக்கு தடம் எண் 127பி மற்றும் 1ஜி ஆகிய பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

வீரவநல்லூர் கோட்டை வாசல் தெரு பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ‘‘ஆதிதிராவிட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஊர்க்காடு சுடலைமாடசாமி கோவில் அருகில் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, கோவில் கட்டிடத்தை இடிக்க முயற்சி செய்து வருகின்றனர். எங்களது கோவிலை இடிக்கும் முயற்சியை கைவிட்டு, பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரை சற்றி தள்ளி கட்ட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.


Next Story