கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2017 12:10 AM GMT (Updated: 13 Jun 2017 12:10 AM GMT)

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மதுக்கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஒரே நேரத்தில் பல்வேறு கிராம மக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக் களை வாங்கினார்.

அப்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள், மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் மதுக்கடைகள்

திப்பணம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த கடைக்கு எதிராக கடந்த 1-ந் தேதி முதல் நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த கடை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த கடையால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு மதுக்கடையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திப்பணம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும் மதுக்கடை திறக்க கூடாது என்ற கிராமசபை கூட்ட தீர்மானத்தை திருத்தம் செய்த பஞ்சாயத்து அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தாழையூத்து- இடையன்குடி

இதேபோன்று நெல்லை அருகே உள்ள தாழையூத்து, சங்கர்நகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டு கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “தாழையூத்து ரெயில் நிலையம் அருகில் 2 மதுக்கடைகள் உள்ளன. குடியிருப்புகள், கடைகள், திருமண மண்டபங்கள், நாரணம்மாள்புரம் நகர பஞ்சாயத்து அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம், ரெயில் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்குள்ள மதுக்கடைகளுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த 2 மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்த ராஜகுமார் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “இடையன்குடி கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை தடுத்து நிறுத்துவதோடு, மதுக்கடை அமைக்க கலெக்டர் அனுமதி அளிக்க கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்துள்ள மற்றொரு மனுவில், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தூண்டில் பாலம் அமைக்கும் பணிக்கு டிப்பர் லாரிகளில் பாறாங்கற்களை இடையன்குடி வழியாக கொண்டு செல்கின்றனர். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த லாரிகளை மாற்று பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் தென்காசி அச்சன்புதூர் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தியும் அந்த பகுதி பெண்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ரேஷன் கடை பிரச்சினை

கடையம் அருகே உள்ள ராஜாங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானவர்கள் கையில் ரேஷன் கார்டுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “ராஜாங்கபுரம் கிராம மக்கள் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிந்தபேரி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. அங்கு பாரபட்சமாக கருதி பொருட்கள் தருவதில்லை. எனவே ராஜாங்கபுரம் ஊருக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தரவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி பாளையங்கோட்டை ஒன்றிய இணை செயலாளர் மாரியப்ப பாண்டியன் கொடுத்த மனுவில், “ராமையன்பட்டி அரசு புதுகாலனியில் தற்போது ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மூலம் ராமையன்பட்டி, வேப்பங்குளம் ஊரை சேர்ந்த 250 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கடையை 11 ரேஷன் கார்டு கொண்டிருக்கும் போலீசார் குடியிருக்கும், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வாறு மாற்றினால் பெரும்பாலான பொதுமக்கள் சிரமப்படுவார்கள். எனவே ராமையன்பட்டியிலேயே தொடர்ந்து ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்” என்று கூறப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை


நெல்லை அருகே உள்ள அலங்காரபேரி பஞ்சாயத்து பாப்பையாபுரம், சண்முகாபுரம் கிராம மக்கள் ஊர் தலைவர் பெருமாள் தலைமையில் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம். இந்த பிரச்சினையை தீர்க்க கோவில்பட்டிக்கு பாலாமடை வழியாக செல்லும் தண்ணீர் குழாயில் இருந்து எங்கள் ஊருக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், “கடம்போடுவாழ்வு கிராமத்தில் விளைநிலங்களின் மத்தியில் உள்ள கல்குவாரியை தடை செய்ய வேண்டும். நாங்குநேரி பகுதி குளங்களை தூர்வார வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story