தாளவாடி அருகே வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 67 மரங்கள் வெட்டி கடத்தல்


தாளவாடி அருகே வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 67 மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 13 Jun 2017 9:39 PM GMT (Updated: 13 Jun 2017 9:38 PM GMT)

தாளவாடி அருகே பரபரப்பு: வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 67 மரங்கள் வெட்டி கடத்தல் அதிகாரிகள் உடந்தையா? தீவிர விசாரணை

தாளவாடி,

தாளவாடி அருகே வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், 67 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அதிகாரிகள் உடந்தையா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள எரஹனள்ளியில் மைராடா வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தை சுற்றியுள்ள 8 ஏக்கர் பரப்பளவில் வெள்ளை வேப்பமரம், கேசேமியா, தும்பை, மா, கருவேலம் உள்ளிட்ட மர வகை கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது 8 ஏக்கரிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன.

இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளாக எரஹனள்ளி மைராடா வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது.

அதிகாரி மழுப்பல்

இந்தநிலையில் பூட்டப்பட்டு இருந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வளர்ந்திருந்த மரங்களை கடந்த ஒரு வாரமாக சிலர் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றார்கள்.

இந்த பணியை அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகள் உரிய அனுமதி பெற்றே மரங்களை வெட்டுகிறார்கள் என்று நினைத்தார்கள்.

இதற்கிடையே நன்றாக இருக்கும் மரங்களும் வெட்டப்பட்டதால், பொதுமக்கள் சந்தேகம் அடைந்தார்கள். இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டார்கள். அவர் மழுப்பலாக பதில் அளித்தார். இதனால் ஏதோ முறைகேடு நடக்கிறது என்று உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக இதுபற்றி தாளவாடி வருவாய் ஆய்வாளர் சுபேந்திரனிடம் புகார் கூறினர்.

மரங்கள் வெட்டி கடத்தல்

அதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சுபேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். அரசுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால், மாவட்ட வனக்குழு அதிகாரி சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்த சான்றிதழின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிடுவார். அதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிடுவார்கள். அதன்பிறகு ஆர்.டி.ஓ. சென்று வெட்டப்படும் மரங்களுக்கு எண் வரிசை அளிப்பார். பின்னரே மரங்களை வெட்ட வேண்டும். ஆனால் இதில் எந்த முறையையும் அவர்கள் பின்பற்றாமல் மைராடா வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதுவரை 67 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உடந்தையா?

மரங்கள் வெட்டும் பணியை அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட்டதால் இந்த சம்பவத்தில் அவர் உள்பட சில அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியதால் மரம் கடத்தல் வெளிச்சத்துக்கு வந்தது. இல்லை என்றால் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஏராளமான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தால் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story