துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க தாமதம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க தாமதம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jun 2017 10:04 PM GMT (Updated: 13 Jun 2017 10:04 PM GMT)

துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க தாமதம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

கோவை,

துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்குவதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 7–ந்தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக 15–ந்தேதிக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாக துப்புரவு தொழிலாளர்கள் கூறி வந்தனர்.

அது போல் இந்தமாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறி, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள், தங்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

தனி அதிகாரியிடம் மனு

பின்னர் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணி, மாநில ஆலோசகர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்புநிதி, காப்பீட்டு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். 72–வது வார்டில் துப்புரவு மேற்பார்வையாளர் ஒருவர் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

அவர்களிடம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். பணம் கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனி அதிகாரி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


Next Story