ராமேசுவரம் ரெயில்நிலையத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ரெயில்பெட்டிகள் பராமரிப்பு பணிமனை
ராமேசுவரம் ரெயில்நிலையத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ரெயில்பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என ஊழியர்கள் புகார்
ராமேசுவரம்,
ராமேசுவரம் ரெயில்நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையின் பிளாட்பாரங்கள் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
½ மணி நேரம் ஆய்வுமதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா நேற்று ராமேசுவரம் சென்றார். இதற்காக மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட பாசஞ்சர் ரெயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு புறப்பட்டு சென்றார். அங்கு காலை 10.15 மணிக்கு சென்ற அவர் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் அறை, ஊழியர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, ரெயில் என்ஜின் டிரைவர்கள் தங்கும் ஒய்வு அறை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காலை 10.45 மணிக்கு ராமேசுவரம் ரெயில்நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். சுமார் ½ மணி நேரம் மட்டுமே இந்த ஆய்வு பணிகள் நடந்தன.
அடிப்படை வசதிகள்அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமேசுவரம் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காகவே வந்துள்ளேன். மானாமதுரை–ராமேசுவரம் ரெயில் பாதையில் உள்ள சிக்னல்கள், தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆகியனவும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல, ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, என்ஜின் டிரைவர்கள் தங்கும் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளேன்.
இந்த பகுதியில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. எனவே, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ராமேசுவரம் ரெயில்நிலையம் உள்ளிட்ட அனைத்து ரெயில்நிலையங்களிலும் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்...இதற்கிடையே, கோட்ட ரெயில்வே மேலாளரின் ஆய்வுப்பணி வெறும் கண்துடைப்பாகவே உள்ளது என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, “ராமேசுவரம் ரெயில்நிலையத்தில் பயணிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளே குறைவாக உள்ளன. மேலும், ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் கோட்ட மேலாளர் ஆய்வு செய்ய வில்லை.
ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் நின்று வேலை செய்யும் பிளாட்பாரங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் காணப்படுகிறது. ஆனால், அவற்றை புதுப்பித்து கட்டித்தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை“ என்றனர்.
அதேபோல, கோட்ட மேலாளரின் வருகைக்காக ராமேசுவரம் ரெயில்நிலையம் மற்றும் ரெயில்நிலைய வளாகம் முழுவதும் நேற்று வழக்கத்திற்கு மாறாக சுத்தம் செய்யப்பட்டு பளபளப்பாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.