ஏர்வாடியில் 7 பேர் உயிரோடு எரித்து கொலை: மனநோயாளி பெண் குடும்பத்தினர் ரூ.2லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


ஏர்வாடியில் 7 பேர் உயிரோடு எரித்து கொலை: மனநோயாளி பெண் குடும்பத்தினர் ரூ.2லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:04 AM IST (Updated: 14 Jun 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடியில் 7 பேர் உயிரோடு எரித்து கொலை: மனநோயாளி பெண் குடும்பத்தினர் ரூ.2லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவு

ராமநாதபுரம்,

ஏர்வாடியில் 7 பேர் உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில், மனநோயாளி பெண்ணின் குடும்பத்தினர் ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் கோ£ட்டு உத்தரவிட்டது.

மனநல சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்அலி (வயது 60). இவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு வந்து மேற்குவாசல் பக்கம் உள்ள முக்தார்லைன் குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கிருந்து தனது மகனுக்கு மனநல சிகிச்சை பார்த்து வந்தார். இவர் வீட்டின் அருகில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பயோளி தடியன் பரம்பை பகுதியை சேர்ந்த குஞ்சுமுகம்மது என்ற முகம்மது சுக்கூர் என்பவர் தனது மனைவி ஹசீனாவுக்கு (39) மனநல சிகிச்சை பெறுவதற்காக தங்கி இருந்தார்.

இந்நிலையில் அப்துல்அலி மகள் பர்கானாபர்வீன் (30) என்பவருக்கும், முகம்மது சுக்கூருக்கும் தொடர்பு இருப்பதாக, ஹசீனா சந்தேகமடைந்தார். மேலும் அப்துல்அலி, அவரின் மகளிடம் தகராறு செய்து, தனது கணவருடன் வைத்துள்ள பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்து வந்தார்.

தீ வைப்பு

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அப்துல்அலி குடும்பத்தினர் இந்த தகராறை பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில் கடந்த 2009–ம் ஆண்டு ஜனவரி 24–ந்தேதி பர்கானாபர்வீன் தனது மகள் சிம்ரின்ஹாசிபா(8), அதே பகுதியை சேர்ந்த செய்யது அப்தாகிர் மகள் சுல்த்தான் பாத்திமா(12), மகன் செய்யது முஸ்தபா (14), தாகிர்சுல்த்தான் மகள் ஷாலிகாபாத்திமா(7) ஆகியோருக்கு டியூசன் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். அருகில் தங்கை அன்சாரிபானு, தந்தை அப்துல் அலி, பாட்டி உம்மாசலிமாபீவி ஆகியோர் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஹசீனா தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் உங்கள் அனைவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி, பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை 8 பேரின் மீதும் ஊற்றி தீவைத்து விட்டு வாசல் கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் அனைவரும் கத்தி கூச்சலிட்டனர். அவர்களின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர். அதில் படுகாயமடைந்த 8 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். ஆனால் டியூசன் படிக்க வந்த செய்யது முஸ்தபா என்ற சிறுவனை தவிர மற்ற 7 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பாக பலியான அப்துல்அலியின் மனைவி மும்தாஜ்பேகம்(55) கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குபதிவு செய்து மனநோயாளி பெண்ணான ஹசீனாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கயல்விழி குற்றம்சாட்டப்பட்ட பெண் மனநோயாளி என்பதால் சிறை தண்டனை வழங்காமல், மனநோயாளிகள் சட்டம் 24 பிரிவின் கீழ் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஹசீனாவை ஒப்படைத்து அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம், கொலை செய்த குற்றத்திற்காக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் இழப்பீட்டை, ஹசீனா குடும்பத்தினர் வழங்கவும், அந்த தொகையை பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நவநாதன் ஆஜரானார்.


Next Story