பிளாஸ்டிக் அரிசி விவகாரம்: 13 இடங்களில் அரிசி மாதிரி எடுத்து சோதனை
பிளாஸ்டிக் அரிசி விவகாரம்: 13 இடங்களில் அரிசி மாதிரி எடுத்து சோதனை அதிகாரி தகவல்
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் அரிசி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு கூட்டம்ராஜபாளையம் அருகே தளவாய்புரம், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட அரிசி அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டியதன் அவசியம், சுகாதாரமான முறையில் அரிசியை தயார்படுத்தும் முறைகள் குறித்து விளக்கிட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
செட்டியார்பட்டியில் உள்ள அரிசி ஆலை திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு அரிசி ஆலை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமர், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு பிரிவின் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா விளக்கவுரை ஆற்றினார். அவர், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் அரிசியை உண்பதற்கான பக்குவத்திற்கு தயார் செய்யும் ஆலைகள் உரிமம் பெற வேண்டியதன் கட்டாயம் குறித்து விளக்கினார்.
அரிசியை தயார்படுத்தும் இடங்களை பராமரிக்கும் முறைகள் பற்றியும், தோல் மற்றும் தொற்று வியாதிகள் உடையவர்களை வேலைக்கு நியமிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார். எந்திரங்களை பராமரிக்கும் விதம் குறித்தும், அரிசியை சுத்தப்படுத்த நச்சுத் தன்மையுடைய கொள்கலன்களை உபயோகிப்பதை தவிர்கக வேண்டும் எனவும் கூறினார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கருப்பையா, சக்திகணேஷ், மாரிமுத்து ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாதிரிஇதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு பிரிவின் மாவட்ட நியமனஅலுவலர் அனுராதா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–
பிளாஸ்டிக் அரிசி தொடர்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் சில்லரை மற்றும் மொத்த வியாபார இடங்களில் 100–க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, 13 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.