மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:00 AM IST (Updated: 15 Jun 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல் தி.மு.க.வினர் 294 பேர் கைது

கடலூர்,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 294 பேர் கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் கைது

தமிழக சட்டசபை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பேரம் பேசியதாக கூறி வெளியான வீடியோ தொடர்பாக தி.மு.க.வினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ராஜாஜி சாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் மறியல்

கடலூரில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தி.மு.க. மாநில மாணவர் அணியின் முன்னாள் செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் கண்டன கோ‌ஷம் எழுப்பியபடி கடலூர் பாரதிசாலை, பீச்ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்–புதுச்சேரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமைலான போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட இள.புகழேந்தி, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி கோவலன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தலைமை கழக பேச்சாளர் கு.வாஞ்சிநாதன், மாணவர் அணி அகஸ்டின் பிரபாகரன், மகளிர் அணி எல்சா உள்பட 25 பேரை கைது செய்து மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

விருத்தாசலம், நெய்வேலி

விருத்தசாலத்தில் கடைவீதி நான்குமுனை சந்திப்பு சாலையில் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், நகர துணை செயலாளர் ராமு, இளைஞரணி பொன்.கணேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, குருசரஸ்வதி, பாண்டியன், நம்பிராஜன், வக்கீல்அருள்குமார், சிங்காரவேலு, ரவிச்சந்திரன், இளையராஜா உள்பட 60 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி தொகுதி தி.மு.க. சார்பில் சென்னை–கும்பகோணம் சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே ஒரத்தூர் தி.மு.க. யெலாளர் ஊராட்சி சபா.பாலமுருகன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

நெய்வேலி துணை போலீஸ் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட சபா.பாலமுருகன் மற்றும் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஞானமணி, ஹரிதிருமால், லோகநாதன், சந்திரசேகர், பன்னீர்செல்வம், ராமலிங்கம், வெங்கடேசன், தட்சிணாமூர்த்தி, வாசு உள்பட

55 பேரை கைது செய்து, 20–வது வட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில்

திட்டக்குடியில் பஸ் நிலையத்தில் மங்களூர் ஒன்றிய மற்றும் திட்டக்குடி நகர தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்–இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் விரைந்து, சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, மங்களூர் ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு உள்பட 25 பேரை கைது செய்தனர்.

காட்டுமன்னர்கோவிலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் அவைத்தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, மாநில நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் காட்டுமன்னார் கோவில் கச்சேரி ரோட்டில் சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் காமிலா பேகம், சசிகணேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் சுப்பிரமணியன், செந்தில், மணிமாறன், சுபகணேசன், விஜயராகவன்,காந்தி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மறியலில் ஈடுபட்டதாக 24 பேரை கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம், பண்ருட்டி

நெல்லிக்குப்பத்தில் கடலூர்–பண்ருட்டி சார்பில் நகர தலைவர் ஷேக்மொய்தீன் தலைமையில் நிர்வாகிகள் பார்த்த சாரதி, ராமு, சாமிநாதன் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

பண்ருட்டியில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நகர செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் பண்ருட்டி பஸ்நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பண்ருட்டி காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் 45 பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை

புதுப்பேட்டையில் கடைவீதியில் பண்ருட்டி–அரசூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பேரூர் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 18 பேரும், அங்குசெட்டிப்பாளையத்தில் பண்ருட்டி–சேலம் சாலையில் வடக்கு ஒன்றிய செயலளார் ராதாகிருஷ்ணன் தலைமயில் மறியலில் ஈடபடட 30 பேரையும் புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 294 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story