சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்; 194 பேர் கைது


சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்; 194 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 3:45 AM IST (Updated: 15 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி, கம்பம், கடமலைக்குண்டு, உத்தமபாளையம் பகுதியில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 194 பேர் கைது சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதை கண்டித்து நடந்தது

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி, கம்பம், கடமலைக்குண்டு, உத்தமபாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 194 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

சட்டசபையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேச முயன்றனர். அப்போது அந்த பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் தி.மு.க.வினர் அதே பிரச்சினை குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே இருந்தனர்.

இதனால் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் சட்டசபை அருகே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜன் உள்பட 25 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கம்பம்

இதே போல் கம்பத்தில் தேனி–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 58 பேரை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கடமலைக்குண்டுவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் கடமலைக்குண்டு பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், சபாநாயகரை கண்டித்தும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் போராட்டத்தில் 50 பேரை கைது செய்தனர். மேலும் மயிலாடும்பாறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

உத்தமபாளையம்

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் கம்பம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தமிழக அரசையும், சபாநாயகரையும் கண்டித்து கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாவட்டத்தில் மொத்தம் 194 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story