மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது


மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 4:15 AM IST (Updated: 15 Jun 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பம் ஆனது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு..க எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதை கண்டித்து அவர்கள் தலைமை செயலகம் எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். திருவள்ளூர் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், பூண்டி ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி என்கிற அன்பரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் காமராஜர் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 120 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம்

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் இரட்டை மண்டபத்தில் நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், முன்னாள் வாரியத்தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், என்ஜினீயர் பரணிதரன் உள்பட திரளான தி.மு.க.வினர் சாலை மறியிலில் ஈடுபட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 100 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே தி.மு,க. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story