பேரூராட்சிகளில் தர்மபுரி ஊரக வேலை உறுதிதிட்டத்தை அமல்படுத்த கோரி மனு கொடுக்கும் போராட்டம்
பேரூராட்சிகளில் ஊரக வேலை உறுதிதிட்டத்தை அமல்படுத்த கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
கிராமப்புற ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதிதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பேரூராட்சி பகுதிகளிலும் ஊரக வேலை உறுதிதிட்டத்தை அமல்படுத்தி ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் குமார், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், மாதர்சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
வாழ்வாதாரம்தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் வசிக்கும் 1 கோடி மக்களில் 90 சதவீதம் பேர் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கூலிவேலைகளையும் நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வேலை உறுதிதிட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
கடந்த 2005–ம் ஆண்டு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பேரூராட்சிகளில் அமல்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.