குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து 3 கிராம மக்கள் போராட்டம்


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து 3 கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:49 AM IST (Updated: 16 Jun 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

மணல் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி குமராட்சி பகுதியை சேர்ந்த 3 கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு நேற்று அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த குமராட்சி அருகே உள்ள இளங்கம்பூர், வெள்ளூர், வாண்டையார் இருப்பு ஆகிய 3 கிராமங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் இந்த 3 கிராமங்களின் வழியாக தினமும் 200–க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. சாலைகள் சேதமடைந்த தால் அந்த பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

லாரிகள் சிறைபிடிப்பு

இதையடுத்து பழுதான சாலையை சீரமைக்க கோரியும், அந்த வழியாக செல்லும் மணல் லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரியும் 3 கிராமத்தை சேர்ந்த மக்கள் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திர மடைந்த 3 கிராம மக்களும் நேற்று காலையில் ஒன்று திரண்டனர்.

அப்போது 2 கிராமங்கள் வழியாக மணல் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவலின் பேரில் குமராட்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், மணல் லாரிகளால் 3 கிராமங்களின் சாலை படுமோசமாகி விட்டது. லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மணல் லாரிகள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

இதற்கிடையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வரும் தங்களது குழந்தைகளை நேற்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் 3 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாணவ–மாணவிகளின்றி பள்ளிக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி ஆசிரியர்கள் 3 கிராம மக்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மணல் குவாரிக்கு 2 கிராமங்கள் வழியாக லாரிகள் வந்து செல்கின்றன. லாரிகள் அதிவேகமாக வந்தால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ–மாணவிகள் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே லாரிகள் கிராமங்கள் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். அதனை மாற்றுப்பாதையில் இயக்கினால்தான், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்து விட்டு சென்றனர்.


Next Story