காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலி கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மண்டியா
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கே.ஆர்.எஸ். அணைமண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா பகுதியில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு காவிரி, ஹேமாவதி ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த அணை பெங்களூரு, பெங்களூரு புறநகர், மண்டியா, ராமநகர், மைசூரு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் கே.ஆர்.எஸ். அணையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
ஆனால், கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கே.ஆர்.எஸ். அணை வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும் கே.ஆர்.எஸ். அணையை நம்பி இருந்த விவசாயிகளும் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினர்.
நீர்வரத்து அதிகரிப்புஇந்த நிலையில், கடந்த சில தினங்களாக குடகு மாவட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் வழியாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 601 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து கொண்டே செல்வதால், அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்கிறது.
மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நேற்றைய நிலவரப்படி 67.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் கே.ஆர்.எஸ். அணையில் 75.16 அடி தண்ணீர் இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயரும் என்று கே.ஆர்.எஸ். அணையின் என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மகிழ்ச்சிகே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அந்தப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் திணறி வந்த பெங்களூரு, பெங்களூரு புறநகர், மண்டியா, ராமநகர், மைசூரு பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்தப்பகுதிகளில் இனி குடிநீர் பற்றாக்குறை நிலவாது என்று என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.