கர்நாடக மேலவை தலைவருக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
கர்நாடக மேலவை தலைவருக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 36 உறுப்பினர்களும், எதிர்த்து 37 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மேலவை தலைவருக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 36 உறுப்பினர்களும், எதிர்த்து 37 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்கர்நாடக மேல்–சபை தலைவராக இருப்பவர் சங்கரமூர்த்தி. பா.ஜனதாவை சேர்ந்த இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியில் நீடித்து வருகிறார். இதனால் சில முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கும் கர்நாடக அரசின் சட்ட மசோதாவை நிறைவேற்றாமல், மேலவை தலைவர் அதை ஆய்வு குழுவுக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர் உக்ரப்பா, சங்கரமூர்த்தி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நேற்று முன்தினம் மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டது. மேல்–சபையில் நேற்று அந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தீர்மானம் தோல்விதலை எண்ணிக்கை அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 75 உறுப்பினர்களை கொண்ட மேல்–சபையில் ஆளும் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து 37 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். தீர்மானத்தை ஆதரித்து 36 பேர் வாக்களித்தனர். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர். சட்டசபையில் ஆளும் காங்கிரசுக்கு 33 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 22 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 13 பேரும், 5 சுயேச்சை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஒரு இடம் காலியாக உள்ளது. பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் மொத்தம் 35 உறுப்பினர்களுடன் 2 சுயேச்சை உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆளும் காங்கிரசுக்கு அக்கட்சியின் 33 உறுப்பினர்களும், 3 சுயேச்சை உறுப்பினர்களும் ஓட்டுப்போட்டனர்.
சித்தராமையா கருத்துநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவிதுள்ள சித்தராமையா, “காங்கிரசுக்கு பின்னடைவு ஒன்றும் ஏற்படவில்லை. அந்த கேள்விக்கே இடம் இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம். இதற்காக நானும், எங்கள் கட்சியின் தலைவர் பரமேஸ்வரும் தேவேகவுடாவுடன் பேசினோம். ஆயினும், மதவாத கட்சியை அக்கட்சியினர் ஆதரித்துள்ளனர். மதசார்பற்ற கட்சியான காங்கிரசை ஜனதா தளம்(எஸ்) ஆதரித்து இருக்க வேண்டும். மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற மனநிலை அந்த கட்சியினருக்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?“ என்றார்.
இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறும்போது, “மேலவை தலைவர் சங்கரமூர்த்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரசார் கொண்டு வந்தனர். இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் என்னுடன் பேசவில்லை. மேலும் அந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன்பு எங்களிடம் இதுபற்றி ஆலோசிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், சங்கரமூர்த்தியை ஆதரிக்கலாம் என்ற மனநிலையை எங்கள் கட்சியின் எம்.எல்.சி.க்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்“ என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதால் ஆளும் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.