அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுவை வருகை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்


அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுவை வருகை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 16 Jun 2017 12:13 AM GMT (Updated: 2017-06-16T05:43:01+05:30)

அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புதுவை வந்தது. கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்.

புதுச்சேரி,

காலநிலை மற்றும் பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதற்கான தீர்வுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிகள் அடங்கிய அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே அமைச்சகம், வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம், அறிவியல் தொழில்நுட்ப துறை இணைந்து வருடந்தோறும் இந்தியா முழுவதும் இயக்கி வருகிறது.

அதேபோல் இந்த வருடமும் 13 கண்காட்சி பெட்டிகளை கொண்ட 9–வது அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே அமைச்சகம் பிப்ரவரி 17–ந் தேதி டெல்லி சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தது. இந்த ரெயில் இந்தியா முழுவதும் 19 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 68 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவித்தது.

புதுவை வந்தது

இந்த அறிவியல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை புதுச்சேரி வந்தது. இதனை வரவேற்ற திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ரெயில்வே கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 13 பெட்டிகளில் தட்பவெப்பநிலை மாற்றம், வனம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு, வறட்சி, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அரிய படக்காட்சிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இந்த சிறப்பு ரெயில் கண்காட்சியை புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் வந்து இந்த பார்வையிட்டனர். அப்போது ரெயில் உள்ள ஊழியர்கள் படக்காட்சிகளை காண்பித்து இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கி கூறினர்.

கவர்னர் பார்வையிட்டார்

இந்த நிலையில் சிறப்பு ரெயிலை பார்வையிட நேற்று மதியம் புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் கிரண்பெடி வந்தார். அவர் அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை பார்வையிட்டார். அப்போது மாணவ–மாணவிகள் பெரும் கூட்டமாக ரெயில் உள்ளே இருந்தனர். அவர்கள் கண்காட்சி ரெயிலை முழுவதுமாக பார்க்க முடியாமல் வெளியேறினர். இதனை கண்ட கவர்னர் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தனியாக அட்டவணை தயாரித்து ஒவ்வொரு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும் நேரம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த ரெயில் கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த ரெயில் புதுவையில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்கிறது.Next Story