3 ஆண்டுகளாக மூடப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு 11 அடுக்குமாடி கட்டிடத்தில் ஒன்று, 2014–ம் ஆண்டு இடிந்து விழுந்தது.
பூந்தமல்லி,
இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். இதையடுத்து மற்றொரு 11 அடுக்கு மாடி கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அந்த கட்டிடத்திற்கு அருகில் இயங்கி வந்த அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியும் மூடப்பட்டது. இந்த பள்ளியில் படித்த 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் படிக்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே ஆபத்தான மற்றொரு 11 அடுக்குமாடி கட்டிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து மூடப்பட்ட அரசு ஆதிதிராவிடர் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அந்த பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 19–ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.