தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது
திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது
திருப்பூர்,
மாட்டுக்கறி பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆதித்தமிழர் பேரவையின் செயலாளர் சோழன் தலைமையில் ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாட்டுக்கறியை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 19 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.