ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.45 லட்சம் வசூல்: கொளத்தூரில் கந்துவட்டிக்காரர் கைது


ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.45 லட்சம் வசூல்: கொளத்தூரில் கந்துவட்டிக்காரர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2017 4:27 AM IST (Updated: 17 Jun 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூரில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.45 லட்சம் வசூல் செய்த கந்துவட்டிக்காரரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 54). அப்பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர், கொளத்தூரை சேர்ந்த தனசேகரன் (50) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக தனசேகரன், 9 சதவீதம் வட்டியுடன் கடன் தொகையை ஜெகதீசனிடம் அவ்வப்போது வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி மொத்தம் ரூ.45 லட்சம் வரை வசூலித்து வந்ததோடு, கடன் வாங்கும்போது, ஜெகதீசனுக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து எழுதி வாங்கியிருந்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த வீடு மற்றும் நிலத்தை தனசேகரன், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தனது உறவினர் கிருஷ்ணன் என்பவருக்கு கிரயம் செய்து வைத்துள்ளார். இதனால் ஜெகதீசனை வீட்டில் இருந்து காலி செய்யுமாறு கிருஷ்ணன் அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

கந்துவட்டிக்காரர் கைது

இது தொடர்பாக ஜெகதீசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சகுந்தலா ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனசேகரன் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வருவதும், ஜெகதீசனுக்கு ரூ.10 லட்சம் தனசேகரன் கடன் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வட்டியுடன் ரூ.45 லட்சம் வரை பெற்றுக்கொண்டதோடு, ரூ.1 கோடி மதிப்பிலான வீடு மற்றும் நிலத்தை அபகரிப்பு செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கந்துவட்டிக்காரர் தனசேகரன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவரது உறவினரான திருச்செங்கோட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story