பத்திரப்பதிவு தொடங்கியது: தடைக்காலத்தில் நடந்த பதிவுகளின் நிலை என்ன?


பத்திரப்பதிவு தொடங்கியது: தடைக்காலத்தில் நடந்த பதிவுகளின் நிலை என்ன?
x
தினத்தந்தி 24 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-25T02:58:28+05:30)

பத்திரப்பதிவு தொடங்கியது: தடைக்காலத்தில் நடந்த பதிவுகளின் நிலை என்ன? நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை தேவை

விருதுநகர்

பத்திரப்பதிவுகள் தொடங்கிவிட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த பத்திரப்பதிவுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முடக்கம்

தமிழகம் முழுவதும் அனுமதி பெறாத வீட்டு மனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை பத்திரப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9–ந்தேதி சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனை முறை படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அரசு நடவடிக்கை தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21–ந்தேதி ஐகோர்ட்டு பத்திரப்பதிவுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் முடங்கின. பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அனுமதி

இதனையடுத்து தமிழக அரசு அனுமதி பெறாத வீட்டுமனைகளை முறை படுத்துவதற்கான விதிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20–ந்தேதிக்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை மறுவிற்பனை செய்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் பத்திரப்பதிவுத்துறை பத்திரப்பதிவினை தொடங்காமலேயே இருந்தது. பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு அரசிடம் இருந்து முறையான உத்தரவுகள் வரவில்லை என கூறி பத்திரப்பதிவுக்கு மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி பத்திரப்பதிவுத்துறை தலைவர் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கோர்ட்டு உத்தரவுப்படி பத்திரப்பதிவுகளை தொடங்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு தொடங்கியது. விற்பனை, மறுவிற்பனை, தானப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான பத்திரப்பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாதிப்பு

ஆனாலும் பத்திரப்பதிவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்து இருந்த காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது. இந்த பத்திரப்பதிவுகளை கணக்கு எடுத்து தடைக்காலத்தில் நடந்த பத்திரப்பதிவுகள் செல்லாது என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. பத்திரப்பதிவு அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக ஐகோர்ட்டு தடை விதித்த காலத்தில் பத்திரப்பதிவுகளை செய்துள்ளனர். தற்போது அந்த பத்திரப்பதிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பத்திரப்பதிவு மூலம் சொத்துகளை விற்றவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு ஒப்புக்கொண்டதால்தான் அவர்கள் தங்கள் சொத்து பத்திரங்களை பதிவு செய்துள்ளனர்.

கோரிக்கை

தற்போது பத்திரப்பதிவின்போது வரைமுறை கட்டணம் ஏதும் வசூலிக்காமலேயே பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக வருகிற ஆகஸ்டு மாதம் 28–ந்தேதி ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. எனவே தமிழக அரசு தடைக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் தகுந்த மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story