அரசு ஆஸ்பத்திரியில் அம்மா ஆரோக்கிய திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


அரசு ஆஸ்பத்திரியில் அம்மா ஆரோக்கிய திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 24 Jun 2017 9:29 PM GMT)

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அம்மா ஆரோக்கிய திட்டத்தை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் அம்மா ஆரோக்கிய திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, அம்மா ஆரோக்கிய திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக அடிப்படை உடல் பரிசோதனைகள் செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து, அவர்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமாக வாழ்வதற்கு வழி வகுப்பதற்கான திட்டம் அம்மா ஆரோக்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பயன்பெறலாம்.

புற்றுநோய் பரிசோதனை

அம்மா ஆரோக்கிய திட்டத்தின்கீழ் ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தவகை பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் கொழுப்புச்சத்து அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரில் உப்புச்சத்து, சிறுநீரில் சர்க்கரை, சிறுநீரில் டெபாசிட், வாய்ப்புற்று நோய் பரிசோதனை, பார்வை மற்றும் கண்புரை பரிசோதனை, தோலில் ஏற்படும் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் மருத்துவ அலுவலர் மூலமாக பொது உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும், பெண்களுக்கு கர்ப்பபை, வாய் புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடையாள அட்டை

தொடர்ந்து அம்மா ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்து கொண்ட 10 பேருக்கு அம்மா ஆரோக்கிய திட்ட அடையாள அட்டையினை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் சரஸ்வதி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் செல்வக்குமார், தொற்றா நோய் பிரிவின் மருத்துவர் ராஜேஸ் உள்பட டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story