குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 24 Jun 2017 9:29 PM GMT)

நார்த்தம்பட்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த்தம்பட்டி ஊராட்சியில் மாரியம்மன்கோவில் தெரு, மேல்வீதி, காந்தி நகர், கொட்டாய்மேடு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் இந்த பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க கோரி, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் நேற்று காலை நார்த்தம்பட்டியில் நல்லம்பள்ளி-லளிகம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, தாசில்தார் ராஜசேகரன், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முறைகேடாக வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story