மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-25T03:03:21+05:30)

செந்துறை அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதனையடுத்து கடந்த 18-ந்தேதி டாஸ்மாக் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மதுவிற்பனை நடந்தது. நேற்றும் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். இதனை அறிந்த கிராம மக்களும், நல்லாம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களும், கிராம முக்கியஸ்தர்களும் தண்டோரா போட்டு கிராம மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். டாஸ்மாக் கடை அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் முத்துவேலையும் அழைத்து வந்து பேசினார்கள். அவரிடம் கிராமமக்களின் நலனுக்காக டாஸ்மாக் கடைக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றனர். அவரும் ஊர் எடுக்கும் முடிவிற்கு கட்டுபடுவதாக உறுதி அளித்தார்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் திடீரென 30-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடை முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் நல்லாம்பாளையம் கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் ஊழியர்கள் வீட்டின் உரிமையாளரிடம் பேசி கடையை திறக்க முயன்றனர். இதனை கண்ட கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் இரும்புலிக் குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த டாஸ்மாக் கடையால் எங்கள் கிராமத்தின் அமைதியே கெட்டுவிட்டது. இந்த கடை மூடப்பட்ட பின்னர் தான் நாங்கள் நிம்மதியாக அச்சமின்றி நடமாட முடிகிறது. ஆகையால் எங்கள் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்றனர்.

பரபரப்பு

அதன் பின்னர் டாஸ்மாக் ஊழியர்கள் 1 மாதம் அவகாசம் கேட்பதாக அந்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களிடம் கேட்டார். 1 நாள் கூட அவகாசம் தரமுடியாது என்று கிராமமக்கள் உறுதியாக கூறினார்கள். இதனால் கிராம மக்களுக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த டாஸ்மாக் கடையால் ஏற்படும் இழப்பை ஊர் மக்கள் ஏற்று கொள்கிறோம். ஆகையால் தங்களது வீட்டில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்று கொள்வதாக முத்துவேல் கூறினார். இதனை கண்ட டாஸ்மாக் ஊழியர் களும், போலீசாரும் டாஸ்மாக் கடையை திறக்க முடியாமல் திரும்பி சென்றனர். இதனால் நல்லாம்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story