28–ந் தேதி திருவிழா தொடங்குகிறது சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை


28–ந் தேதி திருவிழா தொடங்குகிறது சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-25T22:10:47+05:30)

அய்யப்பன் கோவிலில் ஆண்டு திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, புதிய தங்க கொடி மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக ரூ.3.20 கோடி செலவில் புதிய கொடிமரம் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. புதிய கொடி மரத்தில் 9.161 கிலோ தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், புதிய கொடி மர பிரதிஷ்டை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று சன்னிதானத்தில் தத்வஹோமம், தத்வகலசம், வாஜி வாகனத்தில் ஜல அபிஷேகம், அதிகாச கலசபூஜை போன்றவை நடைபெற்றது.

தொடர்ந்து, பகல் 11.50–1.40 க்கு இடையேயான சுப முகூர்த்தத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் அய்யப்பனை வழிபட்டனர். நிகழ்ச்சியில், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி, தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய் தரையில், ராகவன் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருவிழா

புதிய கொடி மர பிரதிஷ்டையை தொடர்ந்து, அய்யப்பன் கோவில் ஆண்டு திருவிழா வருகிற 28– ந் தேதி தொடங்குகிறது. திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 7– ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

28– ந் தேதி காலை 9.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைக்கிறார்.

விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு நடைதிறப்பு, 6.30 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு உ‌ஷபூஜை, தொடர்ந்து 11 மணிக்கு உத்சவ பலி, 1 மணிக்கு உத்சவ பலி தரிசனம், 2 மணிக்கு உச்ச பூஜையை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு படி பூஜை, 9.30 மணிக்கு அத்தாளபூஜை, ஸ்ரீ பூத பலி நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஆறாட்டு

ஜூலை 6– ந் தேதி இரவு 9.30 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 7–ந் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு பம்பை நதிக்கரையில் அய்யப்பனுக்கு ஆறாட்டு நடைபெறும். மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

புதிய கொடி மரம் பிரதிஷ்டை மற்றும் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கேரள அரசு சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 300– க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story