எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரின் வேட்புமனுவை சித்தராமையா முன்மொழிந்தார்


எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரின் வேட்புமனுவை சித்தராமையா முன்மொழிந்தார்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:00 PM GMT (Updated: 25 Jun 2017 6:35 PM GMT)

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமாரின் வேட்பு மனுவை சித்தராமையா முன்மொழிந்து கையெழுத்திட்டார்.

பெங்களூரு,

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமாரின் வேட்பு மனுவை சித்தராமையா முன்மொழிந்து கையெழுத்திட்டார். மேலும் அதில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரும் கையெழுத்து போட்டனர்.

முன்னாள் சபாநாயகர் மீராகுமார்

ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜனதா சார்பில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அவருடைய வேட்புமனுவை கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பு குழு உறுப்பினர் மாணிக்தாகூர் பெங்களூருவுக்கு எடுத்து வந்தார். அவருடைய வேட்புமனுவை முதல்–மந்திரி சித்தராமையா நேற்று முன்மொழிந்தார். அதாவது அதில் கையெழுத்து போட்டார். அவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் எச்.கே.பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், ஜெயச்சந்திரா, டி.கே.சிவக்குமார், தன்வீர்சேட் உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டனர்.

தேவேகவுடா–குமாரசாமி

கையெழுத்து போட்டவர்கள் தங்களின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினருக்கான அட்டையின் நகலை கொடுத்தனர். இதில் தேவேகவுடா, குமாரசாமியும் கையெழுத்து போட்டனர். வேட்புமனுவை பரமேஸ்வர், மாணிக்தாகூர் மற்றும் நிர்வாகிகள் அவர்களின் வீட்டுக்கு எடுத்து சென்று கையெழுத்து பெற்றனர்.

வேட்புமனுவில் கையெழுத்து போட்ட பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்பு மத்திய மந்திரியாக, பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட நாங்கள் அனைவரும் வேட்புமனுவில் கையெழுத்து போட்டுள்ளோம்“ என்றார்.

பல்வேறு கட்சிகள் ஆதரவு

அதைத்தொடர்ந்து பேசிய வீரப்பமொய்லி எம்.பி., “ஆதிதிராவிடர் சமுதாயத்தின் தலைவர் பாபுஜெகஜீவன்ராமின் மகள் மீராகுமார். அவர் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். காங்கிரசின் முயற்சிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பெரும்பான்மை பலம் பா.ஜனதா அணிக்கும் இல்லை, எங்கள் அணிக்கும் இல்லை. இது கொள்கை போராட்டம் ஆகும். அரசியல் சாசனம், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மீராகுமாரை ஆதரிப்பார்கள்“ என்றார்.


Next Story