சாகசத்தின் போது விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு


சாகசத்தின் போது விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Jun 2017 4:30 AM IST (Updated: 26 Jun 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

சாகசத்தின் போது விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு; 3 பேர் படுகாயம் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு

சென்னை

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடித்தது

சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆதிகேசவன் (வயது 21). இவர் நேற்று அதிகாலை தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விவேகானந்தர் இல்லம் அருகே செல்லும் போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென வலது பக்கம் திரும்பியது.

இதை சற்றும் எதிர்பாராத ஆதிகேசவன் பதற்றத்தில் தனது மோட்டார் சைக்கிளையும் வலது பக்கமாக திருப்பி எதிர்சாலையில் செல்ல முயற்சித்தார். அப்போது எதிர் சாலையில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஆதிகேசவன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இதில் ஆதிகேசவன் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றி ஆதிகேசவன் மீது பிடித்தது.

வாலிபர் சாவு

இந்த விபத்தில் ஆதிகேசவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் எதிர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 சிறுவர்களையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், தீக்காயம் ஏற்பட்ட ஆதிகேசவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆதிகேசவன் நேற்று இரவு உயிரிழந்தார்.

தொடரும் சாகசம்

பின்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு சப்–இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், படுகாயம் அடைந்த 3 சிறுவர்கள் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் 3 பேரும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாலும், பந்தயத்தில் ஈடுபடுவதாலும் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபடுவது என்பது தொடர் கதையாகி உள்ளது.


Next Story